பாதுகாப்புப் பெட்டகம் அதிகம் தேவை
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலைக்கேற்ப, திருட்டுகளும் அதிகரித்து


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கத்தின் விலைக்கேற்ப, திருட்டுகளும் அதிகரித்து வருகின்றன. வங்கிகள், தனியார் நிறுவனங்களில் கேமராக்கள் பொருத்திய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக, இப்போது வீடுகளிலும், வழிப்பறிகளிலும் தங்கத் திருட்டுகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
இப்போது பெரும்பாலானோர் நிலம், வீட்டு மனைகளில் முதலீடு செய்வதைக் காட்டிலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைக்காகவும், சில நிமிடங்களிலேயே விற்று காசாக்க முடியும் என்பதற்காகவும் தங்க நகைகளின் மீதான முதலீட்டை மேற்கொள்கின்றனர். இதனால், குடிசை வீடுகளில் கூட சில சவரன் நகைகளைச் சேமித்து வைக்கும் ஏழை மக்களும் உள்ளனர்.
வீட்டில் பாதுகாக்கப்படும் நகைகளை வங்கிகளில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கலாம் என்றால் முடிவதில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்புப் பெட்டக அறையைப் பெறுவதற்கு பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ள நேரிடுகிறது.
"சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் போதாது; குறிப்பிட்ட லட்சத்துக்கு முதலீடு செய்ய வேண்டும்; வங்கிக் கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும்...' என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றனர்.
பாதுகாப்புப் பெட்டக அறையைப் பெற, ஆண்டுக்கு சில ஆயிரம் அளவுக்குதான் வங்கிக்கு வாடகையாகச் செலுத்த நேரிடுகிறது. ஆனாலும், பெரும் செல்வந்தர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும்தான் இவற்றில் முன்னுரிமை.
கல்வி, தொழில் போன்ற கடன் வாங்குவதைவிட வங்கிகளும் தங்க நகைக்குக் கடன் வழங்குவதில் முக்கியத்துவம் செலுத்துகின்றன.
வங்கிகளில் பாதுகாப்பு அறைகளைக் கூடுதலாக்கி, சாதாரண, நடுத்தர மக்களுக்கும் பாதுகாப்பு அறைகள் கிடைக்கச் செய்ய வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளிலும் இதுபோன்ற வசதியை அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
மாவட்ட, நகர கூட்டுறவு வங்கிகள், வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் பாதுகாப்புப் பெட்டக அறைகள் வசதியை மேம்படுத்த வேண்டும். ஏற்கெனவே பாதுகாப்புப் பெட்டக வசதி உள்ள இவ்வங்கிகளில் அறைகளைக் கூடுதலாக்க தமிழக அரசும் முயல வேண்டும்.
இவ்வாறு மேற்கொண்டால் வங்கிகளுக்குக் கூடுதல் வருவாயும் கிடைக்கும்; சாதாரண, நடுத்தர மக்களுக்கும் தங்களது நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்ற நிம்மதி கிடைக்கும். நகைகளைப் பாதுகாப்பாக வங்கிகளில் உள்ள பெட்டகங்களில் வைத்துவிட்டால், நகைத் திருட்டுகளும் குறையும்; போலீஸாருக்கும் ஒரு இனத்தில் புகார்கள் மற்றும் வழக்குகள் எண்ணிக்கை குறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...